பெண்களுக்கு வீட்டு வேலைகள் சாபமா?

சமையல், சாப்பாடு, உறவு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என இல்லத்தரசி என்ற பாத்திரத்தைச் சுமக்காத பெண்கள் எங்கேயும் இருக்க முடியாது.
அதேவேளை, தான் விரும்பாமலே இப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி விரக்தியோடு பேசும் பெண்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை.
ஆனால், ஓயாமல் தன்னைத் துரத்தும் இந்தக் கடமைகளைப் பெண்கள் உளரீதியாக எவ்வாறு நோக்குகிறார்கள்? என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவசியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.

01. சில பெண்கள் கணவன், பிள்ளை, தன் குடும்பம் என்று பாசப் பிணைப்பினால் உந்தப்படல்
02. சிலர், சமுகத்தில் பெண்களின் வகிபாகம் இதுவாகத்தான் இருக்கிறது. எனவே, நாமும் இவ்வாறே இருந்துவிட்டுப் போவோம் என்றெண்ணுதல்
03. மற்றும் சிலர், உலகில் வாழவேண்டிய அவசியம் வந்தாயிற்று எப்படியும் வாழ்ந்தாக வேண்டும் எனப் பல காரணங்களுக்காக இக்கடமைகளைச் சிரமேற்கொள்கிறார்கள்.
விளைவு?
01. பெண்ணின் மனநிலைக்கேற்ப ஆற்ற வேண்டிய கடமைகளின் மீதான ஆர்வம் மாறுபடலாம்.
02. மேலும், தான் உடலை வருத்திச் செய்யும் வீட்டு வேலைகள் தன் உறவுகளால் கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற மன உழைச்சல் பெண்ணுக்கு ஏற்படலாம்
03. அத்துடன், அது வீட்டுத் தலைவிக்குத்தான் கடமை என மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வதனால், அவளுக்கு அதுவே சுமையாகிப் போகலாம்
இக்காரணங்களால் சூழப்பட்ட பெண்கள் தனது அன்றாட வாழ்க்கையை சிரமமாக நினைப்பதுடன், அதிலிருந்து எங்கனம் மீளலாம் எனவும் சிந்திக்கின்றார்கள். இச்சிந்தனையின் விளைவே, மேற்கத்தேய பெண்னிலைவாதிகளின் தோற்றம் எனலாம். ஆனால், இறைமொழி மற்றும் நபிமொழிகள் பெண்ணியவாதத்திற்கான தேவையை இல்லாமல் செய்துவிட்டன என்ற உண்மை பெண்களாலேயே இன்னும் உணரப்படவில்லை.
வாழ்க்கையே ஒரு வணக்கம் எனக்கூறும் கொள்கையுடைய மார்க்கத்தில் இருந்தும் நம்மில் பலர் வணக்கம் என்றால் அது ஐங்கடமைகள்தான் என வரையறுத்துக் கொண்டு ஏனைய செயற்பாடுகளை இஸ்லாத்திற்கு வெளியில் நின்று நோக்குகின்றார்கள்.
இம்மையிலும் பயனளித்து அதற்கப்பாலும் பயனளிக்கும் விதமாக இக்கடமைகளை மாற்றியமைப்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பது குறைவு. மலை போல தோற்றமளிக்கும் வீட்டுக்கடமைகள் எல்லாம் நன்மை சம்பாதித்துத் தரும் தங்க மலைகள் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.
எந்தவொரு வேலையும் “பிஸ்மில்லாஹ்” கூறி ஆரம்பிப்பதன் மூலம் அதை “இபாதத்” ஆக மாற்ற முடியும். இதன்படி கணக்கிட்டால் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான “இபாதத்” களை செய்து அதன்மூலம் இறைவனால் வாக்களிக்கப்பட்ட எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
நம் வாழ்க்கைக் கோலங்கள் எப்படி அமைய வேண்டும் என இஸ்லாம் என்றோ கல்வெட்டாகச் செதுக்கிவிட்டது. வழிகாட்டவோ, சொல்லித்தரவோ உறவுகள் யாருமற்ற ஓர் அனாதைக்கும்கூட இம்மார்க்கம் வழிகாட்டியாகின்றது. ஒரு தாய் அன்பாய் பக்கத்தில் இருந்து சொல்லித் தருவதைப் போன்றே இஸ்லாம் எம்முடன் இருந்து வாழ்க்கை டிப்ஸ் தருகிறது.
உறங்கப் போகும்போது, கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்.  படுக்கை விரிப்பை மூன்று முறை உதறி விடுங்கள். என்கிறது. உறவுகளும்கூட இவ்வளவு அக்கறையாகவும் அறிவாகவும் சொல்லித்தரமாட்டார்கள்.
மேலும், பால் அருந்திய பிறகு வாய்கொப்பளிக்கும்படி உபதேசிக்கிறது.
ஒரு சபையில் பானங்களை தனது வலது புறத்திலிருந்து கொடுத்து வரவேண்டும் எனவும் பரிமாறுபவர் இறுதியிலேயே பருக வேண்டும் எனவும் கற்றுத் தருகிறது.
நீரை ஒரே மூச்சில் அருந்தாமல் மூன்று முறை மூச்சுவிட்டு அருந்த வேண்டும் என்கிறது.
நின்று கொண்டு நீர் அருந்துவது தடுக்கப்பட்டுள்ள அதேவேளை, மறந்து குடித்திருந்தால் வாந்தி எடுங்கள் என்று கூறுமளவிற்கு அதை முக்கியத்துவப்படுத்துகிறது.
பிறர் கேட்டு நாங்கள் மறுக்காமல் கொடுக்க வேண்டியவை :
உப்பு, தண்ணீர், நெருப்பு எனக் கூறுகிறது.
ஆனால், மூட நம்பிக்கைகளால் கவரப்பட்ட சிலபெண்கள் இரவுப் பொழுதாகி விட்டால் சில வீட்டு உபயோகப் பொருட்களை தரித்திரம் எனக்கூறி தேவைப்பட்டோருக்கு வழங்காது இருப்பார்கள். ஆனால், இஸ்லாம் அவற்றைத் தேவையுடையோருக்கு கொடுத்து உதவும்படி ஊக்குவிக்கிறது. மேலும், அதனைத் தர்மம் என்ற வகுதிக்குள் அடக்கி நன்மைதரக் காத்திருக்கிறது.
நதியில் ஓடும் நீராக இருப்பினும் வீண்விரயம் செய்யாதீர்கள் என்கிறது. வுளு செய்தல், பாத்திரங்கள் சுத்தப்படுத்தல், ஆடை துவைத்தல், குளித்தல் போன்றவற்றின்போது சிரமம் பாராது நீரைப் பாத்திரத்தில் தேக்கிவைத்துப் பயன்படுத்துவதற்கு எம்மைத் தூண்டுகிறது.
இவையெல்லாம் மிகச்சாதாரண விடயம்தானே. ஏன் இஸ்லாம் இதையெல்லாம் பெரிதுபடுத்திப் பேசுகிறது? என்ற கேள்வி எமக்குள் எழலாம், ஆம்!ஸ சுயநலத்திற்காக ஒருவர் செய்கின்ற அற்ப விடயத்திற்கும் கூட அது ஆகுமானதெனில் இஸ்லாம் நற்கூலி வழங்கி ஆச்சரியப்படுத்துகின்றது.
இந்தச் சின்னச் சிரமங்கள் எல்லாம் எமக்கு நன்மை சம்பாதிப்பதற்கான வழிகள்தான். எமது பிள்ளைகளும் இந்தப் பழக்கங்களுக்கு வசப்படும்வரை நாம் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
குழந்தை வளர்ப்பு சவாலாகிப் போய்விட்ட காலமிது. அதிலும் வேலைக்கு போகும் தாய் ஆக இருந்தால் இருமடங்கு சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் எப்போதும் பெற்றோரைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டக்கூடியவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இஸ்லாமிய வரலாறுகளை அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். உண்மைச் சம்பவங்கள் பேசப்படும்போது அது குழந்தைகளில் உணர்வுபூர்வமாக தாக்கம் செலுத்தும். இதனால், அவர்களின் புறத்தால் ஏற்படும் தொந்தரவுகள் பெருமளவு குறையும்.
மேலும், இஸ்லாம் கற்றுத் தந்த சந்தர்ப்ப துஆக்கள் இருக்கின்றன. அவற்றை எப்பாடுபட்டாவது நம் பிள்ளைகளின் கண்களில் படுமாறு வைப்பதோடு, கடைப்பிடிக்கவும் தூண்ட வேண்டும். அத்தோடு, அதன் பயன்பாடுகளை நாமும் அனுபவித்து உணர வேண்டும்.
ஏனைய தினங்களில் குளித்தாலும் வெள்ளிக்கிழமை குளிப்பது “சுன்னத்” என்பதை வலியுறுத்தி வீட்டாரை அன்றைய தினம் குளிக்கும்படி தூண்டுவதும், எப்போதும் வுழு உடன் இருக்கும்படி அறிவுறுத்துவதும் கூட நாமறியாப் புறத்திலிருந்து இறை உதவிகளைக் கிடைக்கச்செய்யும் ஆயுதங்கள்.
தொழுகையின் வக்துகளால் நேர அட்டவணையிட்டுக் கொள்வதன் மூலமும் வேலைப் பழுக்களை கட்டுப்படுத்தலாம். “லுஹர்” க்கிடையில் சமையலை முடிக்க வேண்டும். “மஃரிப்” க்குமுன் இரவுணவுக்கான ஆயத்தத்தை முடித்துவிட்டால், “இஷா” வரைக்கும் பிள்ளைகளின் படிப்புக்கு உதவலாம். என்பதாக வகுத்துக் கொள்ளலாம். இதனால் தொழுகை தவறிப் போகாதிருக்கவும் வழிசமைக்கின்றது.
சிலவேளைகளில், மனம் அன்றைய வேலையில் நாட்டமின்றி அசதி நிலைமைக்கு ஆளானவர்கள் செயற்கையான ஒரு புன்னகையாவது முகத்தில் தவழ விட்டுப் பார்க்கட்டும். அந்த வேலையை ரசித்துச் செய்யக்கூடிய உணர்வை உண்மையிலேயே பெறுவார்கள்.
இஸ்லாமிய வழிகாட்டல்கள் எல்லாமே காரணத்துடன் அமைந்தவை. ஆனால், காரணங்களை அறிந்துதான் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. நம்பிக்கை ஒன்றே போதுமானதென அனுபவங்களே எமக்குச் சொல்லித்தரும்.
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது வீட்டு வேலைக்காக உதவியாளர் ஒருவரைக் கோரியபோது, அதனை மறுத்த அண்ணலார் அவர்கள் மகளே! படுக்கைக்குச் செல்லும் போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதி நித்திரை செய்யுங்கள். அது உங்களின் சிரமங்களையும், கஷ்டங்களையும் நீக்கி விடும். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.
அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அதன் பயனை பெற்றுக் கொண்டார்கள். அன்றாட வீட்டுக் கடமைகளை மறுமை நோக்கத்தோடு நகர்த்தும் ஒருபெண் தனது படுக்கையறையில் கணவனிடம் தனது கஸ்டங்களை முணுமுணுக்கமாட்டாள். தனக்கு உடல்வலி இருப்பதாய் உணரமாட்டாள். அவளது உலகத் தேவைகள் நிறைவேறும் அதேவேளை, சம்பாதித்த நற்கூலிகள் மறுபுறமுமாய் ஈருலக வெற்றியை நோக்கி தன்னையும் குடும்பத்தையும் நகர்த்துவாள்.
எனவே, இறைவனிடத்தில் நெருங்குவதற்கான வழி எதுவென துல்லியமாய் அறிந்த பின்பும் இப்பொறுப்பை இல்லத்தரசிகள் ஆண்களுக்கு விட்டுக் கொடுக்கவோ அல்லது. விமர்சனம் செய்யவோ சற்றும் சிந்திக்க மாட்டார்கள். மாறாக, போட்டிபோட்டுக் கொண்டு எத்தனை பொறுப்புகளை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவும் எத்தனை சிரமங்களை வேண்டுமானாலும் சகித்துக்கொள்ளவுமே முன்வருவார்கள்.
பர்சானா றியாஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.