இது பெண்களைக் குறை கூறும் ஆண்களுக்கு…

[ ”தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்” என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் – பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.]

‘உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்” என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.

பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள்.
அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் பெண்கள் எதிரில் வரும்பொழுது பார்வையை தாழ்த்திக் கொள்கிறார்கள்!
இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
o அதிகாரம் படைத்த ஆண்கள் எந்த விஷயத்திலும் பெண்களிலேயே குறை காண்பார்கள். ஆனால் தங்களை வசதியாக மறந்து விடுவார்கள்.
o அந்நிய ஆண்கள் இருக்குமிடத்திற்கு பெண்கள் செல்வதை குறையாக காண்பவர்கள் அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதை குறையாக எண்ண மாட்டார்கள்.
o அந்நிய ஆண் பார்க்கும் விதத்தில் பெண் முகம் திறந்து செல்வதை குறை சொல்பவர்கள், அந்நியப் பெண்களை இவர்கள் பார்ப்பதை குறையாக நினைக்க மாட்டார்கள்.
o அந்நிய ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள் அந்நிய பெண்ணிடத்தில் இவர்கள் பேசுவார்கள்.
இப்படியாக கற்பின் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பதாக நினைத்து வாழும் முஸ்லீம் ஆண்கள் குர்ஆனையும் ஹதீஸையும் புரட்டிப்பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.
அல்லாஹ் திருக்குர்ஆனின் 33 ஆவது அத்தியாயமான ‘அல் அஹ்ஸாப்’ – ன் 35 ஆவது வசனத்தில்; இஸ்லாம், ஈமான், இறைவழிபாடு, உண்மை, பொறுமை, இறையச்சம், தான தர்மம், நோன்பு, கற்பொழுக்கம், திக்ரு செய்வது ஆகிய இந்த பத்து விஷயங்களை குறிப்பிட்டு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுவனம் செல்ல இந்த பத்து தன்மைகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறான்.
இதோ அந்த திருவசனம்;
“நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் -ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.” (33:35)
இதில் ஒன்பதாவதாக “தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்” என்று கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் – பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிட்டிருப்பதை எவரும் கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.
திருமணமாகாத நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணையும், ஆணையும் நூறு கசையடி அடியுங்கள் என்றுள்ள அல்குர்ஆனின் 24/2 வது வசனத்தின் மூலமாக கூறி, ஒழுக்கம் தவறும்போது இருபாலரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை தெளிவு படுத்துகின்றான்.
ஃகாத்திமிய்யா என்ற வமிசத்தை சார்ந்த பெண்ணொருத்தி திருமணம் முடித்த பின் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு, “யா ரசூலல்லாஹ், நான் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்” என்று கூறியபோது அப்பெண்மணியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். அதுபோல் மாயிஜ் என்ற நபித்தோழர் தவறான உறவு வைத்து விட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது அவரையும் கல்லெறிந்து கொல்லச்செய்தார்கள்.
ஒரு பெண் அந்நிய ஆணின் மூலமாக நிர்பந்திக்கப்பட்டு உறவு கொள்ளப்படும்போது தன் கற்பு சூறையாடப்பட்டு விட்டது என்று நீதிமன்றங்களின் படிகளில் ஏறுவதுபோல் அமெரிக்காவில் படித்துக்கொடுக்கும் ஒரு பெண் ஆசிரியர் தன்னுடைய மாணவனிடத்தில் தவறான உறவு வைத்தபோது “எங்களது குடும்பப் பையனின் கற்பு சூறையாடப்பட்டு விட்டது” என்று மாணவனின் உறவுக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர் என்ற பத்திரிகை செய்தி பெண்ணுக்கு கற்பு இருப்பது போல் ஆணுக்கும் கற்புண்டு என்பதை நிரூபித்தது.
இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
இறை உதவி ஆணுக்கும் பெண்ணுக்கும்
கற்பொழுக்கத்திற்கு பெயர் போனவர்கள் ஹளரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். எந்த அந்நிய ஆணையும் சந்தித்திராதவர்கள். ஆனால், கணவன் இல்லாத இவர்கள் ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தபோது ஊர்மக்கள் தூற்றினார்கள். அப்போது தொட்டில் குழந்தையாக இருந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பேச வைத்து மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கற்பொழுக்கத்தை நிரூபித்தான் ஏக இறைவன்.
அதுபோலவே யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை நாடி வந்த அரசியிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஒழுக்க சீலராக நடந்து கொள்கிறார்கள். ஆனால், தன் ஆசைக்கு இணங்காத யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்மீது அவப்பெயரை அரசி ஏற்படுத்துகிறார். இந்த நேரத்தில் அரசியின் குடும்பத்தை சார்ந்த ஒரு தொட்டில் குழந்தையை பேச வைத்து யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்தினித்தனதை இறைவன் நிலைநாட்டினான்.
இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் ஈமானுள்ள ஆண்களுக்கு நல்ல படிப்பினைகளாகவே திகழ்கின்றன.
கற்பொழுக்கத்தை இழக்கச் செய்யும் செயல்கள்
o அந்நியப் பெண்களைப் பார்ப்பது இரு கண்கள் செய்யும் விபச்சாரம்.o அந்நியப் பெண்களை பற்றி பேசுவது நாவு செய்யும் விபச்சாரம்.o அந்நியப் பெண்களை தொடுவது கரம் செய்யும் விபச்சாரம்.o அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு நடந்து செல்வது கால்கள் செய்யும் விபச்சாரம்.
ஒரு ஆணோ, பெண்ணோ தகாத உறவு கொள்வதின் மூலம் மட்டுமே கற்பொழுக்கத்தை இழக்கிறார்கள் என்பதல்ல; தகாத பார்வை, செவி, தொடுதல், பேசுதல், நடப்பது போன்றவற்றின் மூலமாகவும், கற்பொழுக்கத்தை இழக்கிறார்கல் என்பதை தெளிவு படுத்துகிறார்கள்.
பார்வை
இவைகளில் எல்லவற்றிலும் மனிதனை அதிகமாக வழி தவறச்செய்யக்குடியது பார்வை. பார்வையை ஒரு மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் இன்ஷா அல்லா ஹ் நிச்சயம் அவன் கற்பொழுக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைக் காணுவான். எனவேதான் திருமறையிலும், திருநபி போதனைகளிலும் பார்வை பேணுதலைப்பற்றி அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
“நபியே! முஃமினான ஆண்களுக்கு நீங்கள் கூறிவிடுங்கள் அவர்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக்கொள்ளட்டும் (அல் குர் ஆன் 24:30)
இந்த வசனத்தை எத்தனை ஆண்கள் பின்பற்றுகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்,.எத்தனை ஆண்களுக்கு இப்படியொரு வசனம் திருக்குர்ஆனில் இருக்கிறது என்பது தெரியும். பெண்களை எச்சரித்து பேசக்கூடியவர்கள் இந்த வசனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டியது அவசியமல்லவா?!
ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;
“அலீயே! யதார்த்தமாக அந்நிய பெண்ணின் மீது முதல் முறையாக உமது பார்வை பட்டு விட்டால் இரண்டாவதாக அதே பெண் மீது உம் பார்வையை தொடராதே! ஏனெனில் முதல் பார்வையினால் உமக்கு குற்றமுமில்ல. ஆனால், இரண்டாவது பார்வை உமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.”
பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள். அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் இதனைப் பின்பற்றுகின்றனர்.
ஹளரத் மூஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு பயணத்தில் ஓர் இடத்திற்கு வருகிறார்கள். அங்கு ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு பெண் மக்கள் தங்களின் கால்நைடைகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உதவுகிறார்கள்.
வீட்டிற்கு சென்ற இரு பெண்களில் ஒருவர் திரும்ப வந்து “எங்களின் தந்தை உங்களை அழைத்தார்” என் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். செல்லும்போது வழிகாட்டுவதற்காக அப்பெண்மணி முன்னே செல்கிறார்.
நடக்கும்போது அப்பெண்ணின் கால் பகுதியில் ஆடை சற்று விலகுவதைப் பார்த்த முஸா அலைஹிஸ்ஸலாம், தங்களின் பார்வையை பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பெண்ணை பின்னால் வரச்சொல்லிவிட்டு தானே முன்னால் சென்றார்கள் என திருமறையின் விரிவுரைகள் நம் வாழ்க்கையின் படிப்பினைக்கக இந்நிகழ்வை எடுத்துச் சொல்கின்றன.
ஸஹாபாக்கள் ஒரு யுத்த்திற்காக நாடு கடந்து செல்கிறார்கள் அந்நாட்டை நெருங்கியபோது முஸ்லீம் எதிரிகள் முஸ்லீம்களை முறியடிப்பதற்காக தந்திரம் செய்கிறார்கள். அதாவது பல நாட்களாக மனைவியர்களைப் பிரிந்து வாழும் இந்த முஸ்லீம்களை பெண்களைக் கொண்டு தான் வீழ்த்த வேண்டும். அதன்படி ஊரின் ஆரம்பத்திலுள்ள கடைத்தெரு வழியாகவே இஸ்லாமிய படை நுழைய வேண்டும். எனவே, தங்களுடைய இளம் வாலிபப் பெண்களை அரைகுறை ஆடையுடன் கடைத்தெருவில் நிற்க வைத்துவிட்டு “நீங்கள் இங்கு வருகின்ற முஸ்லீம் வீரர்களை தொட்டு சீண்ட வேண்டும்” என்றும் யோசனை சொல்லித்தருகிறார்கள்.
ஊரை நெருங்கிய ஸஹாபாக்களுக்கு நிலைமை தெரியவந்த போது இஸ்லாமிய படைத்தளபதி உபைதுப்னுல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு, போர் வீரர்கள் அனைவரும் பார்வையை தாழ்த்தும்படி கட்டளையிடுகிறார்கள். எல்லா ஸஹாபாக்களும் பார்வையை தாழ்த்தியவர்களாக ஊருக்குள் நுழைகிறார்கள். இவர்களின் இந்த செயல் யுத்தமில்லாமல் வெற்றி கிடைக்க காரணமாகிவிட்டது. நின்றிருந்த பெண்களும், ஊர்மக்களும் இஸ்லாத்தை தழுவினார்கள் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.
“உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்” என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.
“புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது” என பழமொழி கூறுவார்கள். அதுபோல் பெண்களிடம் எவ்வளவுதான் கலாச்சார சீர்கேடுகள் வந்தாலும் ஒரு நல்ல தரமான முஃமின் தன் கற்பொழுக்கத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.
வல்ல ரஹ்மான் சீர்கேடுகள் நிறைந்திருக்கும் இக்காலத்தில் கற்பொழுக்கமுள்ள வாழ்க்கை வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
ஜஸாக்கல்லாஹு கைர் மவ்லவி கே.எஸ்.ஸிராஜுத்தீன், காஷிஃபி.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.