முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கிலான ஆர்ப்பாட்டம் ஏற்படுத்திய தடயங்கள்

right-to-information-actஇலங்கை முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றுகொள்வதற்கும், தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் பாடுபடுவது அவசியமாகும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.ஆனால்,அதற்கான வழிமுறைகள் முற்றிலும் இலங்கை சூழலைக் கருத்திற் கொண்டவையாக இருக்க வேண்டும். இல்லாத போது ’குளிக்கப் போய் சேறு பூசியதாக’ வோ, ’முழம் ஏறி சாண் சறுக்கியதாக’ வோ அமையும்.

இலங்கை என்பது தனித்துவமான ஒரு நாடு.இங்கு முஸ்லிம்கள் அறுதிச் சிறுபான்மையாக, சிதறுண்ட நிலப்பரப்புக்களில் வாழ்ந்து வருகிறார்கள். சிறியதொரு சவாலைக் கூட தைரியமாக எதிர்கொள்ள முடியாத அளவுக்கு ஈமான், அறிவு, பொருளாதாரம், அரசியல், பண்பாடுகள், ஏனைய சமூகங்களோடு உள்ள உறவுகள் போன்ற இன்னோரன்ன துறைகளில் நலிவுற்ற நிலையில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது. சிறிய சம்பவமொன்றுக்காகக் கூட ஆட்டங் கண்டு அதிர்ந்து போகிறது. இது கற்பனையல்ல யதார்த்தமாகும். முஸ்லிம்கள் சற்று தொகையில் அதிகமாக இருக்கும் இடங்களில் எடுக்கும் முடிவுகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் சிறிய தொகையினராக, பிற சமூகங்களில் அதிகம் தங்கி வாழும் முஸ்லிம்களை அதிகம் பாதிக்கும்.

வெளிநாட்டில் இருந்து தீர்வை இறக்குமதி செய்யலாமா?
நிலை இப்படி இருக்கையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தென்னிந்திய, பாகிஸ்தானிய, எகிப்திய, சவுதி அரேபிய வழிமுறைகள் பயன்படமாட்டாது என்பது மாத்திரமல்ல சிலபோது அவை எமது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி விடும். அல்லது புதிய, இல்லாத பாரிய பிரச்சினைகளை உருவாக்கிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக.! அந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைகளைப் படிப்பதும் சீர்தூக்கிப் பார்ப்பதும் அவசியம்.ஆனால், எமது சூழலுக்கு ஏற்ப வழிமுறை தீர்மானிக்கப்பட வேண்டும்.

“ரஷ்யாவில் மழை பெய்யும் போது கம்யூனிஷ்ட்டுகள் இலங்கையில் குடை பிடிப்பார்கள்” என்று ஒரு கருத்து உள்ளது. பிறநாட்டுக் கொள்கையை மட்டுமல்லாது அங்கு கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகளயும் அப்படியே உள்நாட்டிலும் பின்பற்றுவதற்கு இதனை உதாரணமாகக் கூறுவார்கள். “நுவரெலியாவில் மட்டுமே வளரும் மரத்தை ஹம்பாந்தோட்டையில் நட்ட முயற்சிப்பது போன்று” என்று இன்னுமோர் உவமானமும் கூறுவார்கள். வேற்று நாட்டு சீர்திருத்த மற்றும் பிரசார உத்திகள் இலங்கைக்கும் உசிதமாக இருக்க முடியுமா என்பது பற்றி நாம் தீவிரமாக சிந்தித்தே முடிவுகளுக்கு வரவேண்டும்.

ஆனால், இஸ்லாம் எல்லாக் காலத்துக்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும், எல்லா பிரதேசங்களுக்கும் பொருத்தமானது என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளமுடியாது. ஆனால், அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கும் அதனை நடைமுறைபடுத்தும் போது எழும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் கையாளப்படும் வழிமுறைகள் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம், சமூகங்களுக்கு சமூகம் விதியாசப்படும். நபி(ஸல்) அவர்கள் கூட இதனை முன்மாதிரியாக் காட்டியிருக்கிறார்கள். மக்கா காலப் பிரிவில் அவர்கள் கையாண்ட அணுகு முறைகளை விட மதீனா காலத்து அணுகுமுறைகள் மிகவுமே வித்தியாசமாக அமைந்தன.

இலங்கை முஸ்லிம்கள் தற்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களுக்கு தனி மனிதர்கள் முடிவுகளை எடுக்காமல் துறை சார்ந்தவர்களும் புத்திஜீவிகளும் தூரநோக்கோடு சிந்தித்து, கலந்தாலோசித்து (ஷூரா செய்து) முடிவுகளைப் பெறவேண்டும்.

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் சிலர் அல்லது பலர் பேசிக்கோண்டிருக்கும் போது தான் அதனைப் பற்றி ஆராய்ந்து ஆவணமொன்றைத் தயாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் அரசினால் ஒரு குழு 2009ல் நியமிக்கப்பட்டு அது இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தான் வெளிநாட்டு அழுத்தமொன்றும் வந்திருக்கிறது.இது பற்றியும் பலரும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் போது தான் சிலர் ஆர்ப்பாட்டங்களில் குதித்ருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம் மூலமாக உரிமைகளுக்காகப் போராடுவது நவீன கால வழிமுறைகளில் ஒன்று தான்.ஆனால், மேற்படி ஆர்ப்பாட்டத்தின் போது பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளும் சில சுலோகங்களும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த துவேஷங் கொண்டவர்களது துவேசத் தீயில் பெற்றோலை ஊற்றியிருக்கிறது. மிதவாதிகளாக இருந்தவர்களையும் எமக்காகக் குரல் எழுப்பாத நிலக்குத் தள்ளியிருக்கிறது. குளிக்கப் போய் சேறுபூசிக்கொண்டது மட்டுமல்ல குளிக்கப் பயன்பட்ட ஆறு சாக்கடையாக மாற்றப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

1,“உன் ஹிதுவாத அபி பயவென சமாஜயக் கியலா?” (நாம் பயப்படும் சமூகம் என்று அவனுகள் நினைத்துக் கோண்டானுகளா?)
2. “பொது பல நெவெய். பொது பலு (நாய்) சேனா”
3. எம்மை நிறுத்த ஞான சாரவுக்கும் முடியாது நோன (மனைவி) சாரவுக்கும் முடியாது.
4. ’ஹொர, தக்கடி, மத்பென் பொன (கள்ளனுகளான, சாராயம் குடிக்கும்) ஞான சார.
போன்ற ஆர்ப்பாட்ட வாசகங்கள் எவ்வளவு பெரிய எதிர் விளைவுகளை, அதிர்வுகளை ஏற்படுத்தும். பெளத்த தீவிரவாதிகள் இதனை விடவும் மோசமான சொற்களை இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் பாவித்திருக்கிறார்கள், பாவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறியாதவர்கள் இல்லை.அதற்காக நாமும் அதே பாணியில் பேசலாமா? நாய் எம்மைக் கடித்தால் நாமும் நாயை கடிப்பதா?முடிவு என்னவாகும்.எமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.இருக்க வேண்டும்.அல்லாஹ் எமக்கு வழிகாட்டுகிறான்.

1.“அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்குபவற்றை நீங்கள் ஏசவேண்டாம். அவ்வாறு நீங்கள் செய்தால் எவ்வித அறிவுமில்லாமல் அத்துமீறி அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள்.” (அல்குர்ஆன் 6:108)

2.“வேதக்காரர்களுடன் மிகவுமே அழகிய வழிமுறையில் அன்றி உரையாடவேண்டாம்.”(29:46)

இதன்படி பார்த்தால் உரையாடக் கூடாது, அப்படித்தான் உரையாட நேரிட்டால் அதற்கான வழிமுறை “மிகவுமே அழகாதாக” இருக்க வேண்டும் என்பது அல்லாஹ் கூறும் நிபந்தனையாகும். அல்லாஹ்வின் மார்க்கத்தை பாதுகாக்கப் போராடும் வேளையில் அவன் கூறும் வழிமுறைகளை நாம் அனுசரிக்காத போது அவன் பொருந்திக் கொள்வானா?அவனை திருப்திப்படுத்த அவன் விரும்பாத உத்தியைக் கடைப்பிடிக்கலாமா?

இதனை அல்லாஹ் விரும்பமாட்டான் என்பதுடன் இதன் பாதிப்புக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை மட்டும் பாதிக்கப் போவதில்லை. “ஒரு மூட்டை தான் கடிக்கும் எல்லா மூட்டைகளும் அதன் மூலம் பாதிக்கப்படும்” என்று கூறப்படுவது போல் ஒரு சிலரது நடவடிக்கைகளால் முழு சமூகமும் பாதக விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.அல்லாஹ் பாதுகாப்பானாக!
.
எதிர் விளைவுகள் எப்படி அமைந்தன?
முஸ்லிம் தரப்பின் ஆர்ப்பாட்டம் கொழும்பின் ஒருபகுதியில் நடந்து கொண்டிருந்த போது கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட சிங்கள தீவிரவாதிகள் எவ்வளவு மோசமான வார்த்தைகளைக் கக்கினார்கள் என்பதை சமூக வலைத் தலங்களில் வலம் வந்த ஒரு வீடியோவில் கேட்க்க முடிந்தது.அவர்கள்:-
1.’இது சிங்கள நாடு,இந்த இடத்துக்கு ‘சக்கிலி தம்பியோ வரவில்லை. வந்திருந்தால் நெருப்பு வைத்து கொல்லுவோம்.”
2.”தேவையான (ஆயுதங்கள்) எல்லாவற்றையும் நாம் எடுத்து வந்திருக்கிறோம். அவர்கள் வந்தால் நாம் தற்கொலைத் தாக்குதல் நடாத்துவோம்.”

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் தான் குருனாகல் தெல்லியாகொன்ன பள்ளி தாக்கப்பட்டது.அது போன்ற தாக்குதல்கள் நடைபெறும் இடங்களுக்கு கொழும்பு முஸ்லிம் ஆர்பாட்டக்காரர்கள் பாதுகாப்புத் தர முடியுமா? People who live in glass houses shouldn’t throw stones – கண்ணாடி வீடுகளில் இருப்பவர்கள் (பாதையில் போகிறவர்கள் மீது) கல் வீசலாகாது-என்ற ஆங்கில
மரபுத் தொடர் இதனை உணர்த்துகிறது. எனவே,எமது யதார்தமான நிலை பற்றிய சரியான புரிதல் எமக்குத் தேவை.

அல்லாஹ் கூறுகிறான்: “நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீர் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பர் போல் ஆகிவிடுவார். (41:34). எனவே, எதிரியின் மனதை வென்றுகொள்ளும் வழிவகைகள் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டும்.

காத்திரமான முயற்சிகள்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா,தேசிய ஷூரா சபை,முஸ்லிம் கவுன்ஸில் போன்ற மார்க்க, சிவில் அமைப்புக்கள் இந்நாட்டில் இருக்கின்றன.அது தவிர பழுத்த அனுபவமும் சமூகக் கவலையும் நிறைந்த பல புத்திஜீவிகளும் இருக்கிறார்கள். அவர்களும் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில் தமது சக்திக்கு உட்பட்ட வகையில் சில பங்களிப்புக்களை செய்து வருகிறார்கள்.அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் தொய்வு நிலைகளை சந்திக்கலாம். தவறு செய்யலாம்.முஸ்லிம் சமூக உரிமைப் போராட்டதில் அவர்களுக்கு பக்க பலமாக முஸ்லிம் சமூகம் இருக்க வேண்டும் சவால்கள் ஒரு ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமானவை அல்ல.

உதாரணமாக, தேசிய ஷூரா சபை ஜீ.எஸ்.டீ.பிலஸ் விடயமாக முஸ்லிம் சமூகம் சார்பான தனது நிலைப்பாட்டை அரசுக்கு தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்திருக்கிறது. கடந்த புதன்கிழமை(02) ஷூரா சபையின் நிறைவெற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்ற போது, இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக ஆழமாக ஆராய்வதற்கென அனுபவமிக்க சட்டத்தரணிகள், மற்றும் உலமாக்கள், சமூக ஆர்வலர்கள், தஃவாப் பணியாளர்கள் போன்றோரை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட ஒரு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் தலைவராக சட்டத்தரணியும் காழிமார்களது சபைத் தலைவரும் கொழும்பு பெரிய பள்ளிவாயில் நிருவாக சபைத் தலைவருமான நத்வி பஹாவுத்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்..நீதிபதி சலீம் மர்சூப் தலமையிலான குழுவினரது பணிகளை இலகுபடுத்தும் வகையிலும் அதற்கு பக்கபலமாகவும் இக்குழுவின் நடவடிக்கைகள் அமையும்.

வேறு எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிமனிதர்களோ இதில் மேலும் பல முயற்சிகளில் ஈடுபடமுடியும். ஆனால், அனைவரும் பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்ள வேண்டும்.இப்படியான சாத்வீக முறையிலான, அறிவுடனும் ஆராய்ச்சியுடனும் கூடிய ஷூரா அடிப்படையிலான நிபுணத்துவ முறையில் அமைந்த கூட்டு முயற்சிகள் தான் பாதுகாப்பாகவும் பயன்மிக்கவையாகவும் அமையும்.

உணர்வுகள் மதிக்கத்தக்கப்பட வேண்டும்
அதேவேளை, முஸ்லிம் ஆர்பாட்டக்காரர்களது உணர்வுகள் மதிக்கத்தக்கவை. முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சட்டத் திருத்தங்கள் வந்துவிடக்கூடாது என்பது தான் அவர்களதும் எதிர்பார்ப்பாகும். அனால், இலக்கு தூய்மையாக அமைய வேண்டியது எப்படி முக்கியமோ அதேபோல் அவற்றை அடைய கையாளப்படும் வழிமுறைகளும் தூய்மையாக அமையவேண்டும் என்பதில் தீனுல் இஸ்லாம் மிகக் கரிசனை எடுத்துள்ளது.

எனவே, அவர்களுடனான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் நெறிப்படுத்தப்படவேண்டும். ஆனால், அவர்களை சமூகத்தில் இருந்து ஓரங்கட்டி, அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான எந்த முயற்சிக்கும் ஊக்கமளிக்கப்படலாகாது.அவர்களது அணுகுமுறைகள் வித்தியாசபட்டதற்காக அவர்கள் புறக்கணிக்கப்பட்டால் எதிரிகளுக்கு அது சாதகமாக அமைந்து விடும்.சமூகம் மேலும் பிளவுபடும்.

அல்லாஹ் கூறுகிறான்: “முஸ்லிம்கள் அனைவரும் சகோதர்ர்களே.” எனவே, அனைத்து தரப்பினரையும் அரவணைப்போம்,முரண்பாடுகளைப் பேசித் தீர்ப்போம்.முஸ்லிம் அல்லாதவர்களோடு பேசும் போது கூட நளினமும் இங்கிதமும் தேவை என்றால் நமக்குள், நமது சகோதர முஸ்லிம்களோடு பேசும் போது எம்மிடம் எவ்வளவோ ஒழுக்கங்கள் தேவைப்படும்.

“காலத்தின் மீது சத்தியமாக. மனிதர்கள் தோல்வியில் இருக்கிறார்கள். ஆனால், பின்வருவோரைத் தவிர: அவர்கள் ஈமான் கொண்டவர்களாக, நல்ல செயல்களில் ஈடுபடுபவர்களாக, தமக்கிடையில் சத்தியத்தைக் கொண்டு பரஸ்பரம் உபதேசிப்பவர்களாக,பரஸ்பரம் பொறுமையைக் கொண்டு உபதேசிப்பவர்களாக இருப்பார்கள்.” (சூரா அல்அஸ்ர்)

எனவே, ஆழ்ந்த தக்வா, சமூக உணர்ச்சி, உளத்தூய்மை, கலந்தாலோசனை, பொறுமை, நிதானம், தூரநோக்கு, பரஸ்பர அன்பும், விட்டுக்கொடுப்பும் போன்ற பண்புகளை அணிகலன்களாகக் கோண்டு செயல்பட அல்லாஹ் எமக்கு துணைசெய்வானாக!

அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.ஃபளீல்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.