இஸ்லாமிய சட்டத்துக்கும் சமகால சூழ்நிலைக்குமிடையில் இளம் வயதுத் திருமணம்

marriage1முஸ்லிம் தனியார் சட்டம் இன்று பல சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. மேற்கத்திய கண்ணோடம், பெண்நிலை வாதிகளின் வாதம், பாரம்பரிய இஸ்லாமியவாதிகளின் நிலைப்பாடு என்பவற்றுக்கிடையில் பல் கோண இலுபறி நிலைக்கு அது உட்பட்டிருக்கின்றது. குறிப்பாக இலங்கையில் இது குறித்த அண்மைக்கால நகர்வுகள் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்களின் திருமண வயது குறித்து இஸ்லாமிய சட்டத்தின் போக்கை ஆராய்ந்து சமகால சூழலுக்கு ஏற்ப பொருத்தமான நிலைப்பாட்டை முன்வைப்பது இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

இஸ்லாமிய ஷரீஆ சட்டம் பெண்களுக்கான திருமண வயதெல்லைகளை நியமிக்க வில்லை. ஆகவே சிறு பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து இஸ்லாமிய சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை பின்வருமாறு:

1. சிறு பிள்ளைகளை திருமணம் செய்து வைப்பது ஆகுமானது என்பது பெரும்பாலான சட்ட அறிஞர்களின் கருத்தாகும். இதற்கவர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர்:

(அ). பின்வரும் அல் குரான் வசனம்:
﴿وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ﴾ (ورة الطلاق 4.)
“மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், ‘இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்…” (சூரா அல் தலாக் 4).

இந்த வசனம் இன்னும் மாதவிடாய் வராத பெண்களின் தலாக்குக்கான இத்தா காலத்தை மூன்று மாதங்கள் எனக் குறிப்பிடுகின்றது. இத்தா கனவனின் தலாக் அல்லது மரணத்தின் பின்னரே இடம் பெரும் என்பது தெளிவான ஒரு விடயமாகும். ஆகவே இந்த வசன சிறு பிள்ளைகளும் திருமணம் முடித்துக் கொடுக்கப்பட முடியும் என்பதைக் காட்டுகின்றது. (இப்னு குதாமா, முக்னி, 6/487).

(ஆ). பின்வரும் அல் குரான் வசனம்:
﴿وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّـهُ مِن فَضْلِهِ وَاللَّـهُ وَاسِعٌ عَلِيمٌ﴾ (سورة النور 32.)
“இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாத ஆண், பெண்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்” (சூரா அல நூர் 32).

இந்த வசனத்தில் திருமணம் முடிக்காத பெண்களை குறிக்க “அல் அய்மு” என்ற அரபுப்பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இது கணவன் அற்ற சிறுவயது பிள்ளைகளையும் பெரியவர்களையும் குறிக்கும் பொதுச்சொல்லாகும். (ஷபீஹ், முஸ்தபா, அஹ்காமுல் உஸ்ரா பி அல் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா, 186).

(இ). நபி (ஸல்) அவர்களிளது திருமணம்:

இமாம் புஹாரி தனது ஸஹீஹுல் புஹாரியில் “பெரியவர்கள் சிறு பிள்ளைகளை திருமணம் முடித்தல் என்ற தலைப்பிட்டு இது பற்றி வந்துள்ள ஹதீஸ்களை பதிந்துள்ளார்கள். அதில் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (றழி) அவர்களை ஆறு வதாக இருக்கும் போது திருமணம் முடித்தார்கள், ஒன்பது வயதில் அவர்களுடன் சேர்ந்தார்கள், ஒன்பது வருடங்கள் அவர்களுடன் வாழ்ந்தார்கள் என வருகின்ற ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள்”.

இது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமான சட்டம் என்ற வாதம் பிழையானதாகும், ஏனெனில் அலி (றழி) அவர்கள் உம்மு குல்தூம் (றழி) அவர்களை உமர் (றழி) அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் போது பருவமடைந்திருக்க வில்லை என்ற அறிவிப்பு வந்திருக்கின்றது.

(ஈ). பகுத்தறிவு ரீதியான ஆதாரம்:
திருமண ஒப்பந்தம் நலன் சார்ந்ததொரு ஒப்பந்தமாகும். மிகப்பொருத்தமான கணவன் அமையும் போது திருமணம் செய்து வைப்பது பொறுப்புதாரர்களின் கடமையாகும். நல்ல கணவன் என்ற நலன் எப்போதும் வாய்ப்பதில்லை. அது கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பெண் சிறு வாயதிலிருப்பினும் சரியே. (ஸர்கஸி, அல் மப்ஸூத், 3/236).

2. சிறு பெண்பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பது ஆகுமாகாது என்பது இப்னு ஷுப்ருமா, அபூ பக்கர் அல் அஷம் போன்ற அறிஞர்களின் கருத்தாகும். இவர்கள் இதற்கு பினவ்ரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர்:

(அ). பின்வரும் அல் குரான் வசனம்:
﴿وَابْتَلُوا الْيَتَامَىٰ حَتَّىٰ إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ آنَسْتُم مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ﴾ (سورة النساء 6).
“அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் – (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்” (சூரா அல் நிஸா 6).

இந்த வசனம் திருமன வயதை அடைவது பருவ வயதை அடைவதற்கான அடையாளமாக ஆக்கியுள்ளது. அதற்கு முன்னர் திருமணம் செய்து கொடுப்பது அல்லாஹ்வின் இந்த வரையறையை மீறுவதாக அமைந்து விடும்.

(ஆ). குடுபம்ப வாழ்வு, உடலுறவு, இச்சையை தீர்த்தல், பிள்ளைகளைப் பெற்றெடுத்தல் போன்றன திருமணத்தின் நோக்கங்களிற் சிலவாகும். சிறுபிள்ளைப்பருவம் இந்த நோக்கங்களை அடையும் வயதல்ல. இன்னும் திருமணம் சிறுபிள்ளைப்பருவத்தையும் முதிர்ச்சி நிலையையும் வேறு படுத்திக் காட்டும் பிரிகோடாகும், ஆகவே அந்த முதிர்ச்சி நிலைக்கு முன்னர் திருமணம் செய்து வைப்பது கடமைகளையும் பெறுப்புக்களையும் நிறைவேற்ற முடியாத குற்றத்துக்கு உட்படுத்தியதாகவும் சிறு பிள்ளைகளுக்கு தீங்கு நடப்பதற்கு காரணமாகவும் அமைந்து விடும். திருமணமானது ஆயுட்காலத்துக்கு நீடிக்கு ஒப்பந்தம் என்றவகையில் அது பலமான அத்திவாரத்தின் மீது அமைய வேண்டும். ( அபூ ஸஹ்ரா, அல் அஹ்வாலுல் ஸஹ்ஸிய்யாஹ், 109).

ஆதாரங்கள் பற்றிய விவாதம்

இரு தரப்பினரின் ஆதாரங்களை நோக்கும் போது முதல் தரப்பினரின் ஆதாரங்களே பலமானதாக விளங்குகின்றது, நபி (ஸல்) அவர்களின் செயலும் ஸஹாபாக்களின் செயலும் அதனைப்பலப்படுத்தியுள்ளது.

எனினும் இந்த விவாதம் சிறுவயது திருமணம் ஆகுமானது (முபாஹ்) என்ற எல்லைக்குள் மாத்திரமே இருக்கின்றது, அது சுன்னா (செய்தால் நன்மை செய்யா விட்டால் பாவமில்லை) என்ற நிலையை அடைந்த ஒரு விவகாரமல்ல.

இந்த விவகாரத்தை சமூக சூழலின் பிண்ணணியில் இருந்து நோக்குவது அவசியமாகும், அந்த வகையில், சிறுவயதுத் திருமணம் இஸ்லாத்துக்கு முன்னர் ஜாஹிலிய்யக் காலம் தொட்டே இருந்து வருகின்றது. அந்த வகையிலேயே நபி (ஸல்) அவர்கள் திருமணம் பற்றிய சட்டங்கள் இறங்குவதற்கு முன்னர் மக்காவில் வைத்து ஆயிஷா (றழி) அவர்களைத்திருமணம் முடித்து, மதீனாவில் வைத்து அவர்களுடன் சேர்ந்தார்கள். இன்னும் அது ஆகுமானது என்ற வட்டத்தை விட்டு வெளியேற வில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (றழி) அவர்களைத்திருமணம் பேசுவதற்கு முன்னர் அவர்களுக்கு திருமணப் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்தமை இதற்கு ஆதாரமாகும். முத்இம் பின் அதீ தனது மகன் ஜுபைருக்கு ஆயிஷாவை திருமணம் பேசிக்கொண்டிருந்தார்.

சிறு பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக பொருத்தமான கனவன் அமையும் போது அந்த நலனை தவற விடக்கூடாது என்ற நலன் கருத்திற்கொள்ளப்பட்டிருக்கலாம், இதுவே அபூ பக்கர் (றழி) அவர்களுக்கு தூண்டற்காரணியாக இருந்திருக்கலாம். நபி (ஸல்) அவர்கள் போன்ற ஒருவரிடம் நம்பிக்கையுடன் தனது மகளை ஒப்படைக்கலாம் என சிந்திக்க இடமிருக்கின்றது. (ஷக்ர், மராஹிலுல் உஸ்ரா, 1/403).

இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் இந்த விவகாரத்தை விவாதிக்கும் போதும், இறைதூதர் (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் திருமணம் முடிக்கும் போதிருந்த சமூக சூழ்நிலை சமகால சூழலை விட முற்றிலும் வேறுபட்டிருப்பது யதார்த்தமாகும். ஈமானிய ஆதிக்கம் உள்ளங்களில் குறைந்து சடவாத, உலோகாயுத கருதுகோள்கள் மேலோங்கியிருக்கின்றன. திருமண மனப்பக்குவமும், தயார்நிலையும், அதற்கான முதிர்ச்சியும் பழைய காலங்களை விட இன்றைய சிறுபிள்ளைகளிடம் குறைந்தளவே காணப்படுகின்றது.
இன்னும் நவீன கால குடும்ப உருவாக்கம், பிள்ளைவளர்ப்பு போன்ற பொறுப்புக்கள் பாரிய சுமைகளாகும். அவற்றை சுமர்ப்பதற்கு சிறு பிள்ளைகள் சக்தி பெறமாட்டார்கள். (அலி ஹஸ்புல்லாஹ், அஸ்ஸவாஜு பி அல் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா, 78, முஸ்தபா ஸிபாஈ, அல் மர்ஆ பைன அல் பிக்ஹ் வல் கானூன், 131).

இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் திருமணத்துக்கு ஒரு வயதெல்லையை நிர்ணயிக்காமை ஷரீஆவின் பரந்த தன்மையைக் காட்டுகின்றது. இவ்விவகாரத்தில் இடம், கால மாற்றங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன, பருவ வயதை அடையும் காலம் இட, கால மாற்றங்களுக்கேற்ப மாறுபடுவது போன்று திருமண வயதும் மாறுபட்டு அமைகின்றது.

ஆகவே தீங்குகளை தடுப்பதற்கும், நலன்களை உருவாக்குவதற்கும் ஏதுவாக அமையும் வகையில் ஒவ்வொரு நாடும் தத்தமது சமூக சூழலுக்கேற்ப பொருத்தமான, அனைவருக்கும் சாதகமாக அமையும் எல்லையை தீர்மாணித்துக் கொள்ள முடியும்.

ஆகுமான ஒரு விடயம் தீங்குக்கு இட்டுச் செல்லுமாயின் அதனை தடை செய்ய முடியும் என்பது இஸ்லாமிய சட்ட விதிகளில் ஒன்றாகும். குறைந்த வயதுத் திருமணம் ஏற்படுத்திய பாதக நிலைகள், தீங்குகள் என்பன சரியாக கணிப்பிடப்பட்டு அவற்றை தடுப்பதற்காக திருமண வதை தீர்மாணிப்பதில் இந்த விதியினடிப்படையில் தடையில்லை.
அல்லாஹு அஹ்லம்.

  • Author – Dr. Nayeem Mohamed Mohideen
    University Teknologi PETRONAS
    Malaysia

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.