அதிகரித்து வரும் விவாகரத்தும் கற்கத் தவரிய பாடங்களும்.

divorce விவாகரத்துஎங்கு பார்த்தாலும் என் வாழ்வில் நிம்மதியில்லை, எனக்கு வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கிப் போயுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மணவாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து விட்டது’ என்ற செய்தி சர்வ சாதாரணமாகிப் போய்விட்டது. நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் வழக்குகளில் “விவாகரத்து வழக்குகள்” அதிக இடத்தைப் பிடித்து வருகின்றன. ஏன் இந்த இழிநிலை என்பதை சமூகத்தில் சந்தித்து, அனுபவப் பட்ட சில செய்திகளினூடாக முன்வைக்க முனைகிறேன். (அனைவருக்கும் இல்லா விட்டாலும் அறிவுள்ள சிலருக்காவது இது பயணளிக்கும் என்பதால்)

திருமணமான புதிதில் தம்பதியர்களை கவனித்துப் பார்த்தால்! கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் உயிரைக் கூட விடத் தயாராக இருப்பார்கள். கால வெள்ளோட்டத்தில் இப்படிப்பட்டவர்கள்தான் ஒருவரை மற்றவர் வெறுத்து விவாகரத்து கோறும் அளவிற்கு மாறிவிடுகிறார்கள்.

இதற்கான காரணங்கள் என்ன?

திருமண உறவில் இணையும் தம்பதியர் அனுபவரீதியாக கூட்டுக்குடும்பத்தைப் பற்றி அறியாதவர்கள். பெரும்பாலும் அவர்கள் பெற்றோர்களிடம் அதிக உரிமைகளையும், சுதந்திரங்களையும் அடைந்தவர்களாகவே வளர்ந்து விடுகிறார்கள். சிலர் பிறந்தவீட்டு செல்லப் பிள்ளையாக வளர்ந்து விடுவதையும் பார்க்கலாம். இப்படியாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு விட்டுக்கொடுப்பதும் அடுத்தவருடன் ஒத்துப்போவதும அவ்வளவு எளிதில் வருவதில்லை. வருவதற்கான வாய்ப்புகளும் அரிதாகவே காணப்படுகின்றன.

அதிகமான விவாகரத்துகளுக்கு வலுவான காரணங்கள் இருக்கிறதா என்பதை ஆராயும் போது அதிர்ச்சிகரமாக சில அற்பமான காரணங்களே தெரியவருகின்றன.

சில சமயங்களில் கணவன், மனைவியின் தாய், தந்தையரே விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கின்றனர். சிறு, சிறு பிரச்சனைகளைக் கூடப் பெரிய பிரச்சனைகளாக மாற்றி விவாகரத்துக்கு உட்படுத்துகின்றனர்.

தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முயற்சித்த பின், தீர்வுகள் எதுவுமே கை கொடுக்காத நிலையில் கையிலெடுக்க வேண்டிய தீர்வே விவாகரத்தாக இருக்க…. சிலருக்கு அற்ப பிரச்சினைக்கெல்லாம், இதுவே ஒரு தீர்வாக மாறிவிட்டது.

விவாகரத்துகள் சாதாரணமாகிப் போனமைக்கு பலவித காரணங்கள் சமூகத்தில் காணப் பட்டாலும், முக்கியக் காரணமாக “எதிர்பார்ப்புகள்” என்பதையே நான் உணர்கிறேன். பல தம்பதியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்பட்ட போது இதுவே நான் கற்றுக் கொண்ட பாடமாக உள்ளது.

காரணிகள்:-

1) கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் எதிர் பார்ப்புகள் இருப்பதில் தவரில்லை. ஆனால் அவரவர் தகுதிக்கேற்ற எதிர்பார்ப்புகளாக அது அமைய வேண்டும். இன்றைய பல தம்பதிகள் “கட்டுரைகளிலும்,கதைகளிலும் தான் படித்ததைப் போன்ற துனைத்தான் எனக்கு கிடைத்திருக்க வேண்டும்” என்று எதிர்பார்பதினால், இன்பங்களின் இனிமையை இழந்து, அன்பின் அருமையைத் துறந்து, அழகை அசிங்கமாகப் பார்த்து வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.

2) கணவன், மனைவியின் ஆசைகளை, தேவைகளைப் புரிந்து கொள்ளமாட்டார். அதுபோல மனைவி, கணவனுடைய ஆசைகளைத் தேவைகளைப் புரிந்து கொள்ள மாட்டார். ஆனால் கணவன் தன்னைப் புரிந்து கொள்வதேயில்லை என்று மனைவியும், மனைவி தன்னைப் புரிந்து கொள்வதேயில்லை என்று கணவனும் வாழ்வில் வெறுப்பை வளர்த்துக் கொள்வார்கள். இதனால் குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள் வளருகின்றன.

3) கணவனும், மனைவியும் திருமணம் ஆவதற்கு முன்பு, பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறான தேவைகள் இருக்கும். ஆனால் என் ஆசைக்கும், தேவைக்கும் ஏற்ற மாதிரி நீ மாற வேண்டும் என்று கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர் எதிர்பார்ப்பார்கள்; கட்டாயப்படுத்துவார்கள். தன்னுடைய ஆசைகளை, தேவைகளைப் பிறர் மீது திணிப்பார்கள். ஆனால் நான் மாற வேண்டும் என்பதை உணர்ந்து பார்க்க மாட்டார்கள். (உதாரணமாக-: கனவன் கோபக் காரணாக இருப்பான்.தன்னை மாற்றிக் கொள்ளாமல் “அது எனது பழக்கம்” என்று மடமை பேசுவான். மனைவி தூங்கியே காலத்தை கழிப்பவளாக இருப்பாள். தன்னை மாற்றிக் கொள்ளாமல் “அது எனது தாய் வீட்டுப் பழக்கம்” என்று மடமை பேசுவாள்.)

4) கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் அடக்கி ஆழ வேண்டுமென நினைப்பது, இதனால் திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். இதனால் சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம் வளர்ந்து வரும். தன் துனையின் தன்மை எதுவோ அதை அப்படியே ஏற்றுகொள்ளாமல், தனக்கு ஏற்ற மாதிரியான ஆளாக மாற்ற போராடுகிறார்கள். அதிகமான இப்படியான வாழ்கை போராட்டங்கள்தான் கடைசிவரை அமைதியை இழந்த போராடங்களாகவே மாறிவிடுகின்றன. இங்குதான் ஒருவரை மற்றவர் எதிர்த்துப் பேசும் வாசலும் திறக்கப் படுகிறது. ‘”ஓ.கே! இது இப்படித்தான் இருக்கும்’” என நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்கின்றவர்கள் அமைதியாக வாழ்கிறார்கள். “நோ! இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் நடை பிணமாய் வாழ்கிறார்கள். இவர்கள்தான் என்னடா வாழ்க்கை இது? இவளைப் போய் கல்யாணம் பண்ணிக் கொண்டோமே என்று ஆண்களும் இவரைப் போய் கட்டி வைத்துவிட்டார்களே என்று பெண்களுமாக புலம்புபவர்கள். வீட்டுக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று சொல்பவர்கள். தாய் – தகப்பன் கட்டி வைத்துவிட்டார்கள், அவர்களுக்காகப் பார்க்கிறேன் இல்லையென்றால் நல்லவேளை செய்வேன் என்பவர்கள். குழந்தைகளுக்காகச் சேர்ந்து வாழ்கிறேன். இல்லை என்றால்…. என்பவர்கள். இவையெல்லாம் வாழ்கை என்றால் என்ன என்பதை அறியாத அறிவிலிகளின் அறிகுறிகள்.

6) புரிந்து நடந்து கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ளாமை: ஒருவருடைய மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம், அடுத்தவருக்கு இழிவாகவோ, முட்டாள்தனமாகவோ தெரியலாம். ஆனால் அவருக்கு அது பெரிது என்பதை உணர்ந்து, கற்று, ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பிடித்த ஒரு விஷயத்தை மற்றவர் இகழக் கூடாது.

7) கணவனும், மனைவியும் நேர் எதிரான எண்ணங்கள், பழக்க, வழக்கங்கள் உடையவர்களாக இருத்தல்: இப்படியான விடயங்களில் ஒருவர் மற்றவரின் மன நிலை அறிந்து, கலந்துரையாடி இருவருக்கும் சமனானதொரு கொள்கையை வழர்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக….,

* கணவன் மிகவும் கஞ்சனாக இருப்பார். மனைவி தாராளமாகச் செலவு செய்வார்.

* வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பார். மனைவி வீட்டைச் சுத்தம் செய்யமாட்டார்.

* ஒருவர் குழந்தைகளுக்கு மிகவும் செல்லம் கொடுப்பார். அவர்களை அடிக்கக் கூடாது என்று நினைப்பார். மற்றவர் குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கமாட்டார். அடித்து, கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்.

* ஒருவர் வெளியே பயணம் சென்று சுற்றி வருவதில் ஆர்வமுடையவராக இருப்பார். மற்றவரோ எங்கும் போக விரும்பமாட்டார்.

* மாமனார் வீட்டில் தான் விரும்பிய அளவுக்கு மரியாதை தரவில்லை என்று கணவனுக்கு மனக்குறை இருக்கும். அதனால் மனைவியை அவருடைய தாய் வீட்டுக்குப் போக கணவன் அனுமதிக்க மாட்டார். மனைவிக்கோ தனது குடும்பத்தைப் பார்க்க அதிக விருப்பம் இருக்கும்.

இப்படி நேர் எதிரான எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் பல குடும்பங்களில் இருக்கின்றன. இதனால் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. பின்னர் அவை வெறுப்பாக வளர்கின்றன. பிரிந்துவிடும் அளவுக்கு இட்டுச் செல்கின்றன.

தம்பதிகள் வாழ்கை என்றால் எப்படியானது என்பதை முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது வாழ்வின் இன்னும் ஒரு படிநிலை. அந்த படிநிலையில் பொறுமை, பொறுப்புணர்வு, புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்பு இன்றியமையாதவை. இப்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்பிராயம், ரசனை, எதிர்பார்ப்பு போன்றவற்றை புரிந்து நடக்க வேண்டும்.

ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வெவ்வேறானது என்பதை முதலில் இருவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கணவன் தன் மனைவியை ஆணின் வட்டத்திட்குள் வைத்தும், மனைவி தன் கணவனை பெண்ணின் வட்டத்திட்குள் வைத்தும் சிந்திக்கக் கூடாது.

சில ஆண்களுக்கு பெண்ணின் உடல் பெரிய விடயமாகத் தோன்றும். பல பெண்களுக்கோ ஆணின் அன்புதான் பெரிதாகத் தோன்றும். இந்த இயல்பை இருவரும் புரிந்து கொண்டு நடந்தாலே நிறையப் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

தன் கருத்தைப் பிறர் மீது திணிக்க எப்போதும் முயற்சிக்கக் கூடாது. அடுத்தவரின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் அடிக்கடி அன்பாகப் பேசிக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே தலாக் கேட்கும் அளவுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம், காதலிக்கும்போது இருவருக்கும் மத்தியில் ஈர்ப்பும், அன்பும்தான் இருக்கும். புரிதல் இருக்காது. நல்ல திருமண வாழ்க்கைக்குப் புரிதல் மிக அவசியம்.

இவற்றை இல்வாழ்க்கையில் சிக்கல் உள்ளவர்களிடம் சொன்னால் ஒப்புக் கொள்வார்கள். ஆனால் தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

இதற்குக் காரணம், விருப்போ, வெறுப்போ,… பிடிப்பதோ, பிடிக்காமல் இருப்பதோ இவை எல்லாவற்றிலும் நான்தான் சரி என்று அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போய் உள்ளதுதான். இவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போயிருக்கும எண்ணங்களை மாற்றினால் மட்டுமே இவர்களால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

வாழ்க்கை எனும் பயணத்தை முடித்துக் கொள்தல் பெரிய காரியமன்று, நம்மைச் சோதனைகள் சூழ்ந்துவரும் போதும் அடக்கமாய் பயணத்தை தொடர்வதே மிகப் பெரிய வெற்றியாகும்.

நன்றி_
>>அபூ ஸுமையா<<

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.