ஓடிப்போவது ஏன்? எதற்காக?

13224731_l[சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல!

முன்பெல்லாம் கன்னிபெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள்.. ஆனால் தற்போது திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!! இதற்கு காரணங்கள்தான் என்ன?]

ஓடிப்போவது ஏன்? எதற்காக?

அப்பப்பா……விடிந்துவிட்டால் போதும்! ‘ எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்’ அட அல்லாஹ்…. இப்படி ஓடி,ஓடியென ஓட்டத்திற்க்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை : (கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல ‘சரியான காரணங்கள்’, பல ”காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை”கள்.!

சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்….

முன்பெல்லாம் கன்னிபெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள்.. ஆனால் தற்போது திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!! இதற்கு காரணங்கள்தான் என்ன?

சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?

என்ன காரணமாயிருக்கும்..?? இவ்வுலக இச்சையா? இனக்கவர்ச்சியின் தாகமா? இல்லை இல்லறத்தில் இனிமையில்லையா? இல்லை இல்லத்தில் மனக்கசப்பா? இல்லை கணவன் மனைவிக்குள் இவ்விதத்திலும் ஒத்துபோகவில்லையா? அல்லது அன்பின் பறிமாற்றங்கள் அணுவளவுமில்லையா? இதில் எது இல்லை? எதில் குறை? இல்லை எதில் பிழை???? கன்னியாய் ஒருபெண் படிதாண்டிசென்றாலே காலங்காலத்திற்க்கு ஒரு சொல்லாகிவிடும். அதேசமயம் சென்றவள் ஒன்று இனகவர்ச்சிக்காக சென்றிருக்கவேண்டும். அல்லது மனக்காதலுக்காக சென்றிருக்கவேண்டும். எதுவென்றபோதும் படிதாண்டுவது பாதகசெயல் அவளுக்குமட்டுமல்ல அவள்குடும்பதிற்க்கும் அவள் வாரிசுகளுக்கும் சேர்த்துதான். ஆனால்

அதனினும் அநியாயச்செயல் கல்யாணம் முடிந்தும் குழந்தை பிறந்தும் ஒரு பெண் படிதாண்டுவது. சிந்திக்கத்தவறி,சிந்தனைகள் குழம்பி, சீரழிவிற்குபோகும் பெண்மக்களாய் மாறுவது ஏன்? அல்லது அவர்களை மாற்றுவது எது? என வினாக்களோடு புறப்பட்ட மனதுக்குள் விடைகளென்னும் வெளிச்சம் சிறு மின்னல் கீற்றாக தென்பட்டது.அவைகளிங்கே !

தவறுகள் ஆண்களிடமிருந்தே ஆரம்பமாகிறது :

தமது மனைவியரிடத்தில் அன்பாக நடங்கள்; அவளோடு உண்ணுங்கள்; பருகுங்கள்; அவளின் தேவையறிந்து நடந்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கட்டளையிடுகிறது இஸ்லாம். ஆனால் அதை சரிவர செய்கிறார்களா கணவர்மார்கள்???

மனைவியர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை மட்டும் கொடுத்துவிட்டு, மன நிறைவை கொடுக்காது தவறிவிடுகின்றனர். பொன்னும் பொருளும் மட்டும் ஒரு பெண்ணிற்கு போதுமென்றால் அது தன் தாய்வீட்டிலோ அல்லது தனது சம்பாத்தியத்திலோ பெற்றுக்கொள்ள முடியுமே? ஆனால் அதையும் தாண்டி பாசமென்ற ஒன்றும்,காதலென்ற அதீத அன்பும் அனைத்துபெண்களுக்கும் தேவைப்படுமென்பதை எத்தனை கணவர்மார்கள் அறிந்துவைத்துள்ளார்கள்??? கணவன் மனைவியென்றால் என்ன? புரிந்துணர்ந்து, ஈருடல் ஓருயிராய் வாழ்வதுதானே?

சரி அதுக்கும் ஓடிபோவதற்கும் சம்பந்தம் என்ன என கேட்கலாம்.

மனைவியர்களைத் திருப்திப்படுத்த முடியாத ஆண்மைக்குறைவுள்ள கணவர்கள் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டினால் தனக்கு கேவலமென்று மறைப்பதோடு மனைவின் தேவைகளை நிறைவேற்ற தவறி, வீட்டிற்குள்ளே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் குறைகளையும் குற்றங்களையும் மனைவி மீதே சுமத்தி அன்றாட வாழ்வையே அவதிக்குள்ளாக்குவது தனது பலவீனத்தை மறைக்க! இவர்களை போன்றவர்களை அல்லாஹ் எவ்வாறு கண்டிக்கிறான் எனப்பாருங்கள்…

ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள் – 2:231

தம் மீது எக்குற்றமும் இல்லை என அனைத்திற்கும் மனைவி நியாயம் தேட முற்பட்டாலும் ‘கல்லானாலும் கணவன்’ என முத்திரையையும் குத்தி விடுகிறது இச்சமூகம். இதை விட கொடுமையானது இச்சமுதாயம் இந்த விஷயத்தில் ஆண்களின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்தி பெண்களின் மேல் பழி போடுவது தான்! குழந்தை பெறவோ, உடல் சுகம் கொடுக்க முடியாதவளோ உடனே கணவனால் விவாகரத்து கொடுக்க அனுமதிக்கும் சமூகம் பெண்களுக்கு மட்டும் இதை மறுப்பதோடல்லாமல் மார்க்கம் கூறியபடி அக்கணவனுடன் வாழமறுத்து வேறொரு திருமண செய்ய எத்தனித்தாள் எனில் அவள் மீது அவதூறு கூறுகிறது….அஸ்தஃபிருல்லாஹ்….

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்- (24:4)

அவதூறு செய்வோருக்கு இறைவன் கொடுத்த தண்டனையை பாருங்கள்! தேவையற்ற அவதூறுக்கு பயந்து தானே இஷ்ட்டம் இல்லாத வாழ்க்கை வாழ நேரிடுகிறது? இச்சமூகம் தானே அவள் தவறான பாதைக்கு செல்வதை தீர்மானிக்கிறது?

மேலும், நண்பர் என்று அதீத நம்பிக்கை வைத்து அதிகமாக வீட்டுக்குள் அனுமதிப்பது! கணவர் இல்லாத நேரத்திலும் தனியே வர அனுமதிப்பது, வெளியில் போக அனுமதிப்பது, இதனால் கணவரை விட அதிகம் நேரம், நெருக்கம் நண்பருடன் அதிகமாகிறது… அத்துடன் நண்பர்களின் குணாதிசயங்களை அதிகமாக மனைவியிடம் கூறூவதால் காதல், பாசம் உள்ளுணர்வில் ஏற்பட ஆண்களே வழி வகுத்துகொடுக்கின்றனர். இதனாலும் தவறுகள் அதிகரிக்கிறது.

அடுத்து தனக்கான செல்வமொன்று வீட்டிலிருப்பதையே மறந்துவிட்டு, செல்லென்னும் அழைபேசிவழியே ஆண்டுக்கணக்கில் உறவாடிவிட்டு பணம் பணம் என்று செல்வத்தின் பின்னேயே ஓடி ஓய்கின்றனர். இங்கே இவள் சொல்லியழக்கூட ஆளில்லாமல், சாய்ந்து அழக்கூட தோளில்லாமல் வாட்டம் கண்டு, வாழ்வே ஆட்டம் கண்டதுபோல் உணருகிறாள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பல கணவர்கள் செய்யும் செயல்களை!

குறைகளை களைத்தெறிவோம் :

சிந்திக்க வேண்டும். குறைகள் எங்கே என்று கண்டுபிடித்து களையவேண்டும். ஓடிபோனபின்பு எப்படி களைவது குறைகளை என்கிறீகளா? முன்னோடிகளை வைத்து பின்னோடிகள் தன் பாதைகளை மாற்றிக்கொள்ளவேண்டும். நேற்று பிறருக்கு நடந்தவைகள் இன்று அல்லது நாளை நமக்கு நடவாது பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

எப்படி????

இன்றய காலகட்டம், ஆதாள பாதாளத்தின் மேல் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றின் மேல் நடப்பது போலாகும். ஆகவே உங்களில் ஒவ்வொரு செயல்களும் உங்களிருவருக்கானதாக இருக்கவேண்டும். உங்கள் மனைவியர்கள் மீது முதலில் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வரவேண்டும். அடுத்து அவள்மீது அதீதபாசம் அன்புகொள்ள வேண்டும்.

உங்களிடம் மட்டுமே தன் தேவைகளை நிறைவேற்ற நினைக்கும் அவளுக்கு தேவையானவைகளை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அது வாங்கிக்கொடுக்கும் பொருள்களில் மட்டுமல்ல! உங்களுக்கு (மார்க்கமும் அனுமதிக்காத) பிடிக்காத காரியத்தில் ஈடுபட்டால் கண்டியுங்கள் முடிந்தவரை அன்பாக! வெளியிலிருந்து வந்தால் மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். .சிடுசிடுப்புடன் இருக்காதீர்கள் உப்பு சப்பு இல்லாத விசயங்களுக்கெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள். அன்பொழுக பேசாவிட்டாலும் அணுசரனையாக பேசுங்கள்.

அவளின் சிலவிசயங்களுக்காகவும் விட்டுக்கொடுங்கள்.

வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள்.

மிக முக்கியமாக அவள் களைப்படைந்திருந்தால் பரிவாக நடந்துகொள்ளுங்கள்.

அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.

அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

அவளுக்கு பிடித்தபடி உடையணிந்துகொள்ளுங்கள்.

வீட்டுபொறுப்பு குடும்ப நிர்வாக விசயத்தில் அனைத்திலும் அவளை கலந்துகொள்ளுங்கள்.

அவளுக்குத் தேவையானவற்றிற்கு கஞ்சத்தனம் பாராது செலவழியுங்கள்.

படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை உங்கள் உற்ற நண்பனிடம்கூட வெளிப்படுத்தாதீர்கள்.

அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்து இல்லறத்தில் உறவாடுங்கள்.

சிலருக்கு கண்ணியமான பேச்சுகள் பிடிக்கும் சிலருக்கு நகைச்சுவை பேச்சு பிடிக்கும் சிலருக்கு கொஞ்சம் கொஞ்சலாக பேசுவதுபிடிக்கும். எது பிடிக்குமென்று உணர்ந்துகொண்டு அதுபோல் நடந்துகொள்ளுங்கள்.

”அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.” (4:19)

இவையனைத்தும் எங்கு தடைபடுகிறோ அல்லது தடைபடுவதுபோல் எண்ணப்படுகிறதோ அங்கே தவறுகள் உள்நுழைந்து மனக்கட்டுப்பாட்டை தட்டுக்கெட வைக்கிறது. அன்பையும் ஆறுதலையும் இனகவர்ச்சியையும் ஈர்ப்பையும் உணர்ச்சிகளையும் ஊக்கம்தரும் வார்தைகளையும் எதிர்பார்க்கும் மனங்கள் அது கிடைக்காது ஏங்கித்தவிக்கும்போது அவையனைத்தனையும் ஒட்டுமொத்தமாய் கிடைக்கப்பெறும்போது, அதாவது கிடைக்கப் பெறுவதைபோல் உணர்த்தப்படுவதால் ஓடிப்போக நினைக்கிறது… பின்வரகூடிய விளைவுகள் புரியாமல் அதோடு தன்வாழ்க்கை அர்த்தமற்றுபோவதை உணராமல்!

நீங்கள் படிக்கும்காலத்தில் பெண்களோடு பழகியதுபோல்தான் தன்மனைவியும் பிற ஆண்களோடு பழகியிருப்பாள் என்ற வீணான தவறான சந்தேகத்தால் உங்கள் வாழ்க்கையின் அழகியலை கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஒளிவுமறைவின்றி உங்களிடம் ஒப்படைத்த விசயங்களை வைத்து அவர்களை ‘இடுக்கு கிடைக்கும்போதெல்லாம் கொடுக்கு’ போடாதீகள். அப்புறம் உங்களிடம் அனைத்தையுமே ஒளிக்கக் கற்றுக்கொள்வார்கள்.. உங்களைவிட்டு ஒதுங்கியே வாழநினைப்பார்கள்.. அப்படியே உங்களுடன் ஒட்டியிருந்தாலும் மனதளவில் ஒட்டாமலே இருப்பார்கள்..

மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்- நபிமொழி

அதுமட்டுமல்லாது நடத்தைகளில் பழக்க வழக்கங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களறியாது அவர்களை கண்காணியுங்கள். இக்காலகட்டத்தில் ஓடிப்போவோருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது செல் எனும் கைபேசியே! இனக்கவச்சியையும் இல்லாத ஒழுக்கங்களையும் காட்டிக்கொடுக்கிறது. சினிமாவும் சீரியல்களும். அதை அப்படியே செயல்படுத்த மன்னிக்கவும் கூட்டிக்கொடுக்கிறது கைபேசியும் கணினியும். அவையுடம் அவர்கள் அதிகநேரம் உரையாடல்கள் தொடர்ந்தால் அந்த நம்பரை செக் செய்துகொள்ளுங்கள்.. வீணாக சந்தேகப்பட்டு அப்புறம் வீண்பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

.[ இவையனைத்தும் கணவர்கள் மனைவிமார்களுக்கு மட்டும் செய்யக்கூடியவைகள் அல்ல மனைவிகளும் கணவர்மார்களுக்கு செய்யக்கூடியவைகள் (சிலதைத்தவிர) ஏனெனில் தவறுவது பெண்மட்டுமல்ல ஆணும்தான் ஆனால் ஆணின் இச்செயல்கள்மட்டும் அழுத்தம் கொடுக்கப்படாமலே அமுக்கப்பட்டுவிடும். பெண்ணின் இவ்விழிச்செயல் ஆண்டாண்டுகாலம் அசிங்கமாக பேசப்படும்..]

இவையெல்லாம் மீறி ஒன்றுமில்லாத காரணங்களுக்காக குடும்பத்தைவிட்டு குழந்தைகளை தவிக்கவிட்டு, யார் எக்கேடு கெட்டாலென்ன! மானம் காற்றில் பறந்து கந்தலானாலென்ன, தன் சுகம் மட்டுமே முக்கியம் என்று தறிகெட்டு தடம்மாறி போகிறவர்களை. உற்றார்களோ உறவினர்களோ அல்லது அந்த ஊர் ஜமாத்தோ ஊர்கார்களோ ஏற்றுக்கொள்ளக்கூடாது. தண்டனை கடுமையானால் தவறுகள் குறையக்கூடும்.என்ன செய்துவிடுவார்கள் நாளு நாட்கள் பேசுவார்கள் அப்புறம் 6 மாதமோ 1 வருடமோ ஒரு பிள்ளையை பெற்றுக்கொண்டு வந்தால் என்ன செய்யப்போகிறார்கள் என்ற நினைப்புதான் பலரை இத்தவறுகளுக்கு தூண்டுகோளாய் அமைகிறது. அதேபோன்று மனைவியிருந்தும், கணவர்கூடவேயிருந்து தவறு செய்பவர்களுக்கும் தக்க படிப்பினை தரவேண்டும் .(தெரியாமல் அறியாமல் செய்துவிட்டேன் இனி அத்தவறுகளின் பக்கம் போகமாட்டேன் என்று இறைவன்மீது ஆணையிட்டு தவறை உணர்ந்தவரை தவிர)

9:106. அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

அதைவிடுத்து இறைவனுக்காக ஏற்றுக்கொள்றேன் என்று பெயரளவில் சொல்லிவிட்டு உள்ளுக்குள் ஒரு ஒப்பாத வாழ்க்கை வாழ்வோர் நிறைய! “நீ உனக்காக வாழ்! நான் எனக்காக வாழ்க்கிறேன்! ஆனால் நாம் இருவரும் இணைந்திருந்தபடியே!” என்று வாழ்க்கை நடத்துவோருமுண்டு. நவூதுபில்லாஹி மின்ஹா. இறைவன் காப்பற்றவேண்டும். அவனே அனைத்தையும் அறிந்தவன்..

உங்கள் துணையோடு உங்களுக்கு சந்தேகமா? அல்லது உடன்படாமைகள் தொடர்கிறதா? தீர்க்கப்பாருங்கள்; அல்லது தீர்த்துவிடுங்கள் (அச்சொ உயிரையல்ல) அவ(ரி)ளின் உறவை. கூடவே வைத்துக்கொண்டு குத்திக்குத்திக்காட்டுவதில் வாழ்க்கைதான் வலுவிழந்துபோகும். குடும்பம் தான் நிம்மதியிழந்து தவிக்கும். ஒன்று சுமூகமான முடிவெடுங்கள்! அல்லது மார்க்கம் சொல்லித்தந்தவாறு பிரச்சனைக்கு தீர்வுகாணுங்கள். வல்ல இறைவனின் உதவியோடு இருவருமே நிம்மதிகாணுங்கள். இல்லறத்தை நல்லறமாக்குங்கள். இல்லத்தை இனிமையாக்குங்கள். சமுதாயத்தையும் நல்வழிப்படுத்துங்கள்

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் – இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் – அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் 2:284

அன்புடன் மலிக்கா
www-islamiyapenmani-com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.